நாரத பக்தி சூத்திரத்தின் வெளிச்சத்தில்
अथातो भक्तिं व्याख्यास्यामः ।
Athāto bhaktiṃ vyākhyāsyāmaḥ ॥ 1 ॥
இனி, பக்தியை விளக்குவோம்.
सा त्वस्मिन् परमप्रेमरूपा ।
Sā tvasmin paramapremarūpā ॥ 2 ॥
அது தூய அன்பே
अमृतस्वरूपा च ।
Amṛtasvarūpā ca ॥ 3 ॥
இது அமுதத்தின் இயல்பும் உடையது.
பக்தி என்றால் என்ன?
நாரதர் மூன்று சூத்திரங்களில் பக்தியின் இயல்பை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். பக்தியை விளக்குவோம் என்று தொடங்கி, அது தூய அன்பு, காதலின் வடிவம் என்றும், அமுதத்தின் இயல்புடையது என்றும் உரைக்கிறார்.
ஆனால், பரமப் பிரேமை என்றால் என்ன?
ஒருவரை அடையத் துடிப்பதா? அவரைத் தனக்குரியவராகத் தக்கவைத்துக் கொள்வதா? அவர் தரும் மகிழ்ச்சியில் திளைப்பதா? அல்லது, அவருடைய இருப்பையே ஒரு பெரும்பேறாக உணர்வதா?
காதலுக்கும் இச்சைக்கும் இடையிலான வேறுபாடு எங்கே தொடங்குகிறது என்பதே முதல் தேடல். உரிமை கோரும் அன்பு எப்போது போற்றுதலாகிறது? எதிர்பார்ப்புகளால் அளக்கப்படும் உறவு எப்போது கணக்குகளைக் கடந்த பரமப் பிரேமையாகிறது?
ஒருவேளை, பக்தி என்பது காதலின் எதிர்நிலை அல்ல. காதல் தன்னுடைய உடைமை உணர்வைக் கடந்து, நேசிக்கப்படுபவரின் இருப்பையே கொண்டாடத் தொடங்கும் இடத்தில் அதன் புதிய பரிமாணம் பிறக்கிறதோ?
நாரதர் காட்டும் பக்தியின் பாதையில், காதலை அதன் ஆழத்தில் புரிந்துகொள்ள முயல்வோம்.
காதல் முதல் பக்தி வரை.
காதல் இச்சை அல்ல, உடைமையும் அல்ல.
காதல் கவர்ச்சியல்ல;
எளிதில் எட்டுவதல்ல;
தேவைக்குக் கிடைப்பதல்ல.
உடல் விழைவில் கலப்பது இச்சையே, காதலல்ல. பசி கிடைத்ததையெல்லாம் தின்னும்; காதலோ தீனிக்கு அடங்காதது.
இச்சை உடலை நாடும்;
காதல் உயிரை நாடும்.
கவர்ச்சி உச்சமாகலாம், ஆழத்தை அளக்காது. சேர்க்கை காதலைக் காட்டலாம், அதுவே காதலாகாது.
காதல் சிறையல்ல; அதற்கு விலையும் இல்லை.
மனங்கள் மாறும், உடல் தள்ளாடும், மனிதர் மாறுவர். காதலோ, நேசிக்கப்படுபவர் மாறாமல் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிப்பதில்லை.
அழகு என்பது இதுவே:
ஒருவரின் பேரன்பை ஆயுள் முழுதும் தக்கவைப்பது.
எண்பதிலும் நேசிக்கப்படுவது இளமை எஞ்சியிருப்பதாலல்ல;
இளமையைத் தாண்டி பக்தி விஞ்சி நிற்பதால்.
காதல் வியாபாரமல்ல; தியாகம் அதன் நாணயமுமல்ல. விழித்திருந்த இரவுகளுக்குக் கணக்கெழுதினால், அது அன்பல்ல, கடன். துயரைப் பகிர்வதால் காதலராகவோ, சுகத்தைப் பகிர்வதால் அர்ப்பணிப்பானவராகவோ மாறிவிடுவதில்லை.
காதலுக்குத் தோல்வியில்லை, எதிர்பார்ப்பே தோல்வியடையும். உண்மையாய் நேசித்ததில் தோல்வியே இல்லை. உறவுகள் உடையலாம், இச்சை வற்றலாம், பாதைகள் பிரியலாம். நாம் கேட்டது கிடைக்கவில்லை என்பதற்காக காதல் வீணாகிவிடாது.
எதிர்பார்ப்பற்றதே காதல்.
ஒருவேளை, இங்குதான் காதல் பக்தியாகிறதோ!
நேசிக்கப்படுபவர் சுகத்தின் ஊற்றாக அன்றி, அவரின் இருப்பே ஒரு பெருஞ்செல்வமாய் உணரும் தருணத்தில்.
பிடிப்பது மாறிப் போற்றுதலாகி,
பேரம் மாறி வழங்குதலாகி,
பக்தியில் உரிமை கோரல் கரையும் போது.
காதல் அடிமைப்படுத்தலோ, புலம்பலோ அல்ல.
அது போற்றி வெல்வது;
கட்டுப்படுத்துவதல்ல, மீண்டும் மீண்டும் மனமுவந்து தேர்ந்தெடுக்கப்படும் பெரும்பேறு.
இச்சை நாடுவது திருப்தி;
காதல் அடைவது பக்தி.
அழகே உருமாறிப் போனாலும், நிலைத்து நிற்கும் காதலை விளைவிப்பதே பேரழகு


Leave a Reply